
தூத்துக்குடி: தூத்துக்குடி தருவை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில் ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 74 ஆவது குடியரசு நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க | குடியரசு நாள் விழா: சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்!
இவ்விழாவில், தேசிய ஒற்றுமையினை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களும், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைநிற புறாக்களும் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவர்-மாணவிகளின் பறையாட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ரூ.10.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்-மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...