
பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்னம் (92) வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்ற ஜூடோ ரத்னம், போக்கிரி ராஜா, தலைநகரம் போன்ற திரைப்படங்களில் நடிகராகவும் மிளிர்ந்தார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்களின் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ கே.கே.ரத்தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.
இதையும் படிக்க | பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவு: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர் ஜூடோ ரத்னம். பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கலையுலகிலும் அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி மறைந்துள்ள ஜூடோ ரத்னம் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கும் திரையுலக, அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.