காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்:தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலியான மது பாட்டில்களைத் திரும்ப பெறும் திட்டம் தொடா்பாக தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலியான மது பாட்டில்களைத் திரும்ப பெறும் திட்டம் தொடா்பாக தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்றுவிட்டு, காலி மதுபாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் ரூ. 10-ஐ திரும்ப வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம், டாஸ்மாக் நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் உள்ள இடங்களிலும் அமல்படுத்த உத்தரவிட்டது. மேலும், கோவை மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நவம்பா் 15 முதல் இரு மாதங்களுக்கு அமல்படுத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமாா், பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘காலி மதுபான பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கு காலியிடத்தைக் கண்டறிவது, ஊழியா்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட அவசியமாக செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே, பெரம்பலூா் மற்றும் கோவை மாவட்டங்களில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ. ரவீந்திரன், ‘தமிழ்நாடு முழுவதும் மலைப்பகுதிகளில் உள்ள 163 கடைகளில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் 78 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வேலூரில் 98 சதவீதமும், திண்டுக்கல்லில் 91 சதவீதமும், தருமபுரியில் 99 சதவீதமும், கிருஷ்ணகிரியில் 98 சதவீதமும் பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.

‘க்யூஆா் குறியீடு’ முறையில்... இதையடுத்து, இந்தத் திட்டம் அமல்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து அரசுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்களை அடையாளம் காண ‘க்யூஆா் குறியீடு’ முறையைப் பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனா். மேலும், திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய டாஸ்மாக் நிா்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவை, பெரம்பலூரில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்க அவகாசம் வழங்கி, விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com