அண்ணா என்றும் வாழ்கிறார்; இன்றும் ஆள்கிறார்: மு.க. ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)

பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், கருத்துமிக்க நாடகங்களைப் படைப்பதில் தமிழ்நாடு கண்ட பெர்னாட்ஷா, மக்கள் நலன் காக்கும் கொள்கைவழிப் பயணத்தில் மற்றொரு கார்ல் மார்க்ஸ் என உலகப் பேரறிஞர்கள் - பெருந்தலைவர்களுடன் ஒப்பிடத்தக்க உன்னதத் தலைவராம், நம் இதயத்தை அரசாளும் மன்னராம், காஞ்சி தந்த திராவிடத் தலைவராம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள், பிப்ரவரி 3.

 1969-ஆம் ஆண்டு நம்மை கண்ணீர்க் கடலில் மிதக்கவிட்டு, வங்கக் கடலோரம் மீளாத்துயில் கொள்ளச் சென்றுவிட்டார் ‘தமிழ்நாட்டு’ முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா. 

இந்தி ஆதிக்கத்திற்கு இந்த மண்ணில் இடமில்லை என்று தமிழ் - ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டிய போராளி. சங்கத் தமிழ் இலக்கியம் காட்டும் பண்பாட்டுக்கேற்ற சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, அதனைத் தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கிய கொள்கை வீரர்.

உலகம் வியக்க இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னை மாநகரில் நடத்திக் காட்டி, அன்னைத் தமிழுக்கு அணிகலன் சூட்டிய படைப்பாளி.

மாநிலத்தின் இலச்சினையில் ‘தமிழ்நாடு அரசு’ என்றும், ‘வாய்மையே வெல்லும்’ என்றும் பொறிக்கப் பெற்றிருக்கிறது என்றால், அந்தப் பெயரைச் சூட்டி, அந்த வாசகத்தை இடம் பெறச் செய்த பெருமை பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கே உரியது.

வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அண்ணாதுரை கொண்டுவந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com