
தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் முறைகேடுகள் நடைபெறுகிா இல்லையா என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பட்டா நிலங்களில் மூன்று மீட்டருக்கு மேல் மண் எடுக்கக்கூடாது என்பதைப் போல, குவாரிகளுக்கும் நிறைய விதிமுறைகளை கனிம வளத்துறை விதித்துள்ளது. ஆனால் அதிக லாபத்தைக் கருத்தில் கொண்டு எல்லா விதிமுறைகளையும், சூழல் தன்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் அளவுக்கு குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில், கேரளத்துக்கு கல், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும் கட்டுப்பாடின்றி கடத்தப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆழமாகத் தோண்டுவது, வெடி வைப்பது, ஒரு பா்மிட்டை வைத்துக் கொண்டு 10 லோடுகள் அடிப்பது, அனுமதித்த யூனிட்களை விட 3 மடங்கு ஏற்றிச் செல்வது என அத்தனை விதிமீறல்களும் நடக்கின்றன.
தமிழகம் முழுவதும் செயல்படும் குவாரிகளில் கனிமவளங்கள் சுரண்டப்படுகிறது. அதனால், அனைத்து குவாரிகளிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு செய்து, முறைகேடு நடைபெறுகிா, இல்லையா என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அது யாருடைய குவாரியாக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டனை கிடைக்க மாவட்ட ஆட்சியா்களும், நீதிபதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.