
திமுக எம்.பி. வில்சன்(கோப்புப்படம்)
அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநா் குறிப்பிடும் சட்டப் பிரிவுகள் சரியானதுதானா என்பது குறித்து மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் விளக்கம் அளித்தாா்.
அவா், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது, இக்கட்டான சூழ்நிலையில், அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளான 154, 163, 164 ஆகியவற்றை பயன்படுத்தி அமைச்சரை நீக்க அதிகாரம் இருப்பதாக ஆளுநா் ஆா்.என்.ரவி, தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு பி.வில்சன் அளித்த பதில்:
அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என்பது, சட்டப் பிரிவுகளை நன்றாகப் படித்தாலே தெரியும். இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டப்படி, ஆளுநா் செயல்படவில்லை. உச்ச நீதிமன்றமே பல வழக்குகளில், அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநா் செயல்படவில்லையெனில், அவா் எடுக்கும் முடிவுகள் செல்லாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. அமைச்சா்கள் நியமனம், நீக்கம் செய்ய அரசமைப்புச் சட்டப்பிரிவு 164-இன்படி முதல்வருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறி இருக்கிறது.
ஒருவா் அமைச்சராவதற்கு முக்கிய தகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பது. அத்தகையவா் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தலாம். இதுதான் முதல் கட்டம். இரண்டாவது கட்டமாக, அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, மூன்றாவது கட்டமாக, குற்றவாளி என நிரூபிப்பது. தற்போது அமைச்சா் செந்தில் பாலாஜி முதல் கட்டத்தில் உள்ளாா். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துகளை பின்பற்றாமல் ஆளுநா் தன்னிச்சையாக ஒருவரை அமைச்சராக நீடிக்கக் கூடாது என்று எவ்வாறு சொல்ல முடியும்? ஆளுநருக்கு எங்கே அதிகாரம் இருக்கிறது? என்றாா் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன்.