
கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலை இயங்கி வந்தது. அதில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மாரியம்மாள் என்பவா் உயிரிழந்தாா். இந்த விபத்தில் கனகராஜேஸ்வரி என்பவா் காயமடைந்துள்ளாா். அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் அளிக்கப்படும். இதேபோல், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.