
சுவாமி சிலைகளை தோளில் சுமந்தபடி சொந்த வீட்டிற்கு அழைத்து வந்த மன்னாயக்கன்பட்டி கிராம மக்கள்.
வாழப்பாடி அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில் இருந்து சுவாமிகளை விருந்துக்கு அழைத்துச் சென்ற மன்னாயக்கன்பட்டி கிராம மக்கள், சனிக்கிழமை இரவு தாரை, தப்பட்டை மேள வாத்தியம் முழங்கத் தலையில் சுமந்து ஆடிப்பாடி சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பஞ்ச பாண்டவர்களான தருமர், அர்ஜூணன், பீமன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரெளபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு கிராம மக்களிடையே முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரளெபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்பதும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோயில்களிலுள்ள சுவாமிகளையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்துச் செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.
வாழப்பாடி திரெளபதியம்மன் கோயில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே. 23–ஆம் தேதி வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மன்னாயக்கன்பட்டி கிராமத்திலும் மாரியம்மன் திருவிழா நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர். ஜூன் 28. புதன்கிழமை சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், ஜூன் 29 வியாழன் மற்றும் 30 வெள்ளிக்கிழமை இரு தினங்களும் தேரோட்டமும் நடைபெற்றது. இதற்காக, தாரை, தப்பட்டை மேள வாத்தியம் முழங்க மிகுந்த ஆரவாரத்தோடு, 3 கி.மீ தொலைவிலுள்ள வாழப்பாடி திரெளபதி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக திரண்டு வந்த மன்னாயக்கன்பட்டி கிராம மக்கள், கடந்த ஜூன் 12 திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் செய்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை தோளில் சுமந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தபடி, மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயிலுக்கு விருந்தினராக அழைத்து சென்றிருந்தனர். அங்கு இந்த சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டு வந்தனர்.
தேர் திருவிழாவை வெகு விமரிசியாக கொண்டாடி மகிழ்ந்த பிறகு, 19 நாட்கள் கழித்து, வாழப்பாடியில் இருந்து விருந்துக்கு அழைத்துச் சென்ற சுவாமிகளை சனிக்கிழமை இரவு மேள வாத்தியம் முழங்க, மின்விளக்குகள், அம்மன் வேடமிட்ட கேரள நடன மங்கைகள் புடை சூழ, ஊர்வலமாக கொண்டு வந்து திரௌபதி அம்மன் கோயிலில் சேர்த்தனர். இந்த ஊர்வலத்தை வழிநெடுக திரண்டு நின்று கண்டுகளித்த இரு கிராம மக்களும் ஆரத்தியெடுத்து வரவேற்பளித்தனர். அருகருகே உள்ள இரு கிராமங்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில், சுவாமி சிலைகளை விருந்துக்கு அழைத்து செல்லும் பாரம்பரிய உறவு முன்னோர்கள் வழியாக பழமை மாறாமல் இன்றளவும் தொடர்ந்து வருவது இரு கிராம மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து வாழப்பாடி ஊர் பெரியதனக்காரர்கள் கூறுகையில், வாழப்பாடிக்கும், மன்னாயக்கன்பட்டி கிராமத்திற்கும் திருவிழாக்கள் நடத்துவதில் முன்னோர்கள் வழியாக நல்லுறவு நீடித்து வருகிறது.
மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் தேர்த்திருவிழா நடத்தும் போது, வாழப்பாடிக்கு வந்து சுவாமி சிலைகளை விருந்தினராக அழைத்துச் சென்று சிறப்பு பூஜை வழிபாடு நடத்துவதும், வாழப்பாடி கோயில்களை நிர்வகிக்கும் ஊர் பெரியதனக்காரர்களை அழைத்துச் சென்று விருந்து கொடுப்பதையும் இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர். வாழப்பாடியில் திரெளபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைத்து, வாழப்பாடி கிராம மக்கள் மரியாதை செய்து வருவதும் குறிப்பிடதக்கதாகும் என்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...