பெற்றோர்களை இழந்த மாணவிக்கு இலவச வீட்டு மனை பட்டா: ஆட்சியர் நடவடிக்கை

சேலம் கல்பாரப்பட்டி அருகே பெற்றோர்களை இழந்த மாணவிக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு கட்டிக் கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
பெற்றோர்களை இழந்த மாணவிக்கு இலவச வீட்டு மனை பட்டா: ஆட்சியர் நடவடிக்கை


சேலம்: சேலம் கல்பாரப்பட்டி அருகே பெற்றோர்களை இழந்த மாணவிக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு கட்டிக் கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். தறி தொழிலாளியான இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு பூங்கொடி மற்றும் அமுதா ஆகிய இரண்டு பெண்கள் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு செல்வதற்காக வெங்கடாஜலம் அவரது மனைவி மாரியம்மாள் மகள் பூங்கொடி ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் மல்லூர் வரை சென்று திரும்பியபோது கார் மோதி விபத்துக்குள்ளாகி மூன்று பேரும் பலியாகினர். 

இந்த நிலையில் இளைய மகள் அமுதா மட்டும் வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். இந்த நிலையில் பிளஸ் 2 பொது தேர்வில் அமுதா அதிக மதிப்பெண் எடுத்துள்ளார். மேல் கல்வியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் உதவிக்கோரி பலரிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் சிலர் அவருக்கு கல்லூரியில் சேர உதவி செய்தனர். இந்த செய்தி தமிழக முதல்வரின் கவனத்துக்கு வந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவியை நேரில் அழைத்து அவருக்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்ததோடு, தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாகவும் மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான செலவை ஏற்பதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவி அமுதா தனியார் கல்லூரியில் சேர்ந்து தற்போது படித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு மருத்துவ உதவி, குடியிருக்க வீடு வேண்டுமென கோரிக்கை விடுத்ததையடுத்து மாணவிக்கு வீடு கட்டிக் கொள்ள வீரபாண்டி கல்பாரப்பட்டியில் இலவச வீட்டுமனைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கியதோடு அவர் வீடு கட்டிக்கொள்ள போதுமான நிதியையும் மாவட்ட ஆட்சியர் ஒதுக்கீடு செய்தார் 

இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் மாணவி அமுதாவுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்.

தொடர்ந்து மாணவி கூறும்போது..
தன்னுடைய கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினர் தனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்து வருகின்றனர். ஆனால் எனது பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பணம் பறிப்பு நோக்கில் செயல்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளதாகவும் எனவே தனக்கு உதவுபவர்கள் எந்த உதவியாக இருந்தாலும் நேரிலே வந்து வழங்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com