ஆளுநர் அரசியல் பேசக்கூடாது: அண்ணாமலை பேட்டி

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, அவரது கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
திண்டிவனத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Published on
Updated on
1 min read

விழுப்புரம்: ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, அவரது கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஒரு அறக்கட்டளையின் சார்பில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 39 ஜோடிகளுக்கு திருமணத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை நடத்தி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை. கொள்கை அளவில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. அதேநேரத்தில் பொது சிவில் சட்டம் என்பதற்கு அனைவருக்கும் நன்மைத் தரக்கூடியது. சிறுபான்மையினருக்கும் நன்மைத் தரக்கூடியது. இது அனைவரையும் இணைப்பதற்கான சட்டம், பிரிப்பதற்கானது அல்ல. கருத்து வேறுபாடுகளை கடந்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் அணையை கட்டிவிட முடியாது. அம்மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது எனக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழ்நாடு அரசு இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. முதல்வர் மௌனம் காத்து மாநில உரிமை மற்றும் விவசாயிகளின் நலனை அடகு வைப்பதை ஏற்க முடியாது. மக்களின் நலன் சார்ந்த அரசாக திமுக செயல்படவில்லை.

தமிழ்நாடு ஆளுநர் அரசியல்வாதி இல்லை. எல்லாவற்றுக்கும் அவர் பதிலளிக்க முடியாது. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, ஆளுநர் அவரது கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும். ஆளுநர், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்ப்பதுதான் சரி.

தக்காளி, வெங்காயம் போன்றவைகள் பருவக் காலங்களில் விளையக்கூடியவை. அவற்றின் பதுக்கல் மற்றும் ஏற்றுமதியை தடுக்க வேண்டும். விவசாய சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலமே விலையேற்றத்துக்குத் தீர்வு காண முடியும் என்றார் அண்ணாமலை.

அப்போது கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com