
முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் சிறுவன்
விருதுநகரில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் தன்னை காப்பாற்றும் படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கும் சிறுவனின் விடியோ சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் அப்துல் மஜித். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ராபியக் பேகம் என்ற மனைவியும் அஸாரூதின் (14) என்ற மகனும் உள்ளனர்.
அஸாரூதின் விருதுநகரில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அசாருதீனுக்கு ஒரு வயதிலிருந்து அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து உள்ளது.
இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே அசாருதீனுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த சிறுவனுக்கு தற்போது கல்லீரலும் பாதிக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக சிறுநீரக மாற்று மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தாய், தந்தை இருவரும் கூலி வேலை செய்வதால் பல லட்சங்கள் செலவு செய்து தன்னுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் தற்போது அந்த சிறுவன் தமிழக முதல்வரிடம் உதவி கேட்டு பேசும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் தங்களுடைய குழந்தையை காப்பாற்றித் தருமாறு அந்த சிறுவனின் பெற்றோரும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...