
கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு குரங்கு அருவி எனப்படும் கவியருவிக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர் பொள்ளாச்சி வனத்துறையினர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான வால்பாறை சாலையில் ஆழியாறு அணையை ஒட்டி வனத்துறை கட்டுப்பாட்டில் குரங்கு அருவி எனப்படும் கவி அருவி உள்ளது.
இந்த அருவி மிகவும் பிரபலமானது என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலங்களிலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக வெயிலின் தாக்கத்தினாலும் கடும் வறட்சியினாலும் கவியருவி தண்ணீர் இன்றி மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய காரணமாக வால்பாறை, சத்திஎஸ்டேட் போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கவி அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி, அருவியில் கொட்டும் நீர் வரத்தை பொறுத்து சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என தெரிவித்து இருந்தார்.
தற்போது வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் மழையின் தாக்கம் சற்று குறைந்ததால் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக வருவதால் கவி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படும் எனவும் அருவியில் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி அறிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...