
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு, இரு வேறு தீா்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு ஜூலை 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத் துறையினர் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியில்லை என்று கூறவில்லை. எனவே, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு அதிகாரம் உள்ளது.
தான் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்கும் உரிமை செந்தில் பாலாஜிக்கு உள்ளது. எனவே, அவா் விசாரணையைத் தடை செய்ய முடியாது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டப்படியானதுதான் என 3-ஆவது நீதிபதி தனது தீா்ப்பில் கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாள்களை அமலாக்கத்துறை காவல் நாள்களாக எடுத்துக்கொள்ள முடியாது. செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என நீதிபதி கூறியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்களது கருத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மனுவில் வலியுறுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.