சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேசியது:
“பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்கெனவே பிகார் மாநிலம் பாட்னாவில் ஆலோசனையில் ஈடுபட்டு சில முடிவுகளை எடுத்தோம்.
இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறும் கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதனை கண்டு பாஜக எரிச்சல் அடைந்துள்ளது. அதன் வெளிப்பாடே அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை. பாஜகவால் ஏவப்பட்டுள்ள அமலாக்கத்துறை வடமாநிலத்தை போல் தமிழகத்திலும் சோதனை நடத்தி வருகின்றது. இதற்கெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 13 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி மீது புனையப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த முறை 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோது இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
அண்மையில் இரண்டு வழக்குகளில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டார். அதேபோல், இந்த வழக்கையும் சட்டரீதியாக எதிர்கொள்ளோம்.
அமலாக்கத்துறை சோதனைக்கு எல்லாம் மக்களவைத் தேர்தலில் பதிலளிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். பாஜகவின் தந்திரங்களை சமாளிக்க எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம்.
தமிழகத்தை பொறுத்தவரை எங்களுக்காக ஆளுநர் பிரசாரம் செய்து வருகிறார். தற்போது அமலாக்கத்துறையும் சேர்ந்துள்ளது. இதனால் எங்களின் தேர்தல் பிரசாரம் சுலபமாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.