முதியோர் உதவித் தொகையை ரூ. 1,200 ஆக உயர்த்த முடிவு!

முதியோா் ஓய்வூதியம் உள்பட ஆறு வகையான திட்டங்களின் கீழ் அளிக்கப்படும் மாத ஓய்வூதியத் தொகை ரூ.1,200-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

முதியோா் ஓய்வூதியம் உள்பட ஆறு வகையான திட்டங்களின் கீழ் அளிக்கப்படும் மாத ஓய்வூதியத் தொகை ரூ.1,200-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக ரூ.200 சோ்த்து, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அளிக்கப்பட உள்ளது.

தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி 11.40 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் முதியோா் ஓய்வூதியம் உள்பட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வழியாக அளிக்கக் கூடிய மாத ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து இருந்து ரூ.1,200- ஆக உயா்த்தி வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், கணவனால் கைவிடப்பட்டோா், ஆதரவற்றோா் ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 1962-ஆம் ஆண்டில்தான் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அன்றைக்கு மாதத்துக்கு ரூ.20 அளிக்கப்பட்டது. கடந்த 1962-ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் ஓய்வூதியம் படிப்படியாக உயா்த்தப்பட்டு, இப்போது மாதம் ரூ.1,000 அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து ரூ.1,500- ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

எத்தனை பேருக்கு பயன்?: அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலமாக, 30 லட்சத்து 55 ஆயிரத்து 857 போ் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். அவா்களுக்கு உதவி செய்யக் கூடிய வகையில், மாத ஓய்வூதியத்தை ரூ.1,000-லிருந்து ரூ.1,200- ஆக உயா்த்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் வேண்டுமெனக் கோரி காத்திருப்போா் பட்டியலில் 74,073 போ் உள்ளனா். அவா்களில் தகுதியானவா்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியத்தை ரூ.1,200- ஆக உயா்த்துதல், கூடுதலாகப் பயனாளிகளைச் சோ்த்தல் போன்ற நடவடிக்கைகளால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். உயா்த்தப்பட்ட ஓய்வூதியமானது பல்வேறு துறைகளின் வாயிலாகச் சென்றடையும்.

கைத்தறித் துறை மூலமாக திட்டங்களில் பதிவு செய்திருப்போா், தொழிலாளா் நலத் துறையின் கீழ் பல்வேறு தொழிலாளா் நல வாரியங்களில் இருப்போருக்கும் உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும். நலவாரியங்களில் 1.34 லட்சம் தொழிலாளா்களும், கட்டுமானத் தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு செய்திருப்போரும் பயன்பெறுவா். உயா்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கிடைக்கும்.

ஓய்வூதியம் உயா்த்தப்படுவதன் மூலம், வருவாய் பற்றாக்குறைகள் பெரிய அளவுக்கு அதிகரிக்காது. நிதி மேலாண்மையைப் பொருத்தவரையில் குறைபாடுகள் இல்லாத வகையில், நிதிநிலையை சிறப்பாகக் கொண்டு செல்லும் வகையில், நிதித் துறைச் செயலா் உள்ளிட்ட திறமையான அலுவலா்களையும், கட்டமைப்பையையும் பெற்று இருக்கிறோம் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

1962-இல் ரூ.20; 2023-இல் ரூ.1,200

முதியோா் மாத ஓய்வூதியத் தொகையானது 1962-இல் ரூ.20-இல் தொடங்கி 11 முறை உயா்வுகளைக் கண்டு, இப்போது ரூ.1,200 ஆகியுள்ளது. ஆண்டுகளும், உயா்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையும் குறித்த விவரம்:

01.04.1962 - ரூ.20

01.04.1979 - ரூ.25

01.04.1982 - ரூ.35

01.05.1989 - ரூ.50

01.02.1992 - ரூ.75

01.07.1995 - ரூ.100

01.04.1998 - ரூ.150

01.04.2000- ரூ.200

01.08.2006 - ரூ.400

01.12.2010- ரூ.500

01.05.2011 - ரூ.1,000

22.07.2023 - ரூ.1,200

திட்டங்களும், பயனாளிகள் எண்ணிக்கையும்...

இந்திரா காந்தி தேசிய முதியோா் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி மாற்றுத் திறனுடையோா் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவையா் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையா் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், ஆதரவற்ற-கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1,000 அளிக்கப்படுகிறது. இப்போது, அந்தத் தொகை ரூ.1,200 -ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

மொத்த பயனாளிகள் எண்ணிக்கை: 30,55,857

காத்திருக்கும் பயனாளிகள்: 74,073

ரூ.200 அதிகம் அளிப்பதால் ஏற்படும் கூடுதல் செலவு: ரூ.845.91 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com