புதுச்சேரி மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா: ஆனந்தக் கண்ணீர் வடித்த ரங்கசாமி

மருத்துவ மாணவியின் பேச்சைக் கேட்டு ஆனந்த கண்ணீர் விட்டார் முதலமைச்சர் ரங்கசாமி.
கண்ணீர் விட்ட ரங்கசாமி
கண்ணீர் விட்ட ரங்கசாமி
Published on
Updated on
2 min read


புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், மருத்துவ மாணவியின் பேச்சைக் கேட்டு ஆனந்த கண்ணீர் விட்டார் முதலமைச்சர் ரங்கசாமி.

நிகழ்ச்சியில் பேசிய ரங்கசாமி, புதுச்சேரியில்  மருத்துவ பல்கலைக்கழகம், காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என  அறிவித்தார்.

புதுச்சேரி அரசின் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. 2010-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை மருத்துவ படித்து முடித்த 626 இளங்கலை மாணவர்களுக்கும் 2017-ல் இருந்து 2019- வரை முதுகலை மருத்துவம் முடித்த 20 மாணவர்களுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவக்கல்லூரி இயக்குனர் உதய சங்கர், முதலமைச்சர் ரங்கசாமியால் தான் இந்த மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட்டது என்றும், பல காரணங்களால் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. தற்போது கல்லூரியை துவங்கியவரின் கையால்தான் பட்டமளிப்பு விழா நடக்க வேண்டும் என இறைவனின் ஆசி இருக்கிறது என்றார். இதனைக் கேட்டவுடன் முதலமைச்சர் ரங்கசாமி கண்ணீர் விட்டார்.

அடுத்து பட்டம் பெற்ற ஒரு பெண் மருத்துவர் பேசும்போது, தங்களது ஏழை  குடும்பத்தில் 4 பெண்களில் 3 பேர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவராகியுள்ளோம். இதற்கு முதலமைச்சர் தான் காரணம் என உணர்ச்சி வசப்பட்டு பேசினார். இதனை கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி, மேடையில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

தன்னால் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் இலவசமாக ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படித்து மருத்துவர்கள் ஆக பணியாற்றுவதை எண்ணியும், அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தற்பொழுது பட்டங்களை வழங்கி வருவதால் ஆனந்தத்தில் முதல்வர் ரங்கசாமி மேடையிலேயே கண்ணீர் வடித்த சம்பவமும் விழாவில் கலந்து கொண்டவர்களை உணர்ச்சிவசப்படுத்தியது.

அதனை தொடர்ந்து விழாவில் பேசிய  முதலமைச்சர் ரங்கசாமி, பல ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. இப்பொழுது நடப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், புதுச்சேரியில் எளிதாக கல்வி கிடைத்துகொண்டு இருக்கிறது.
மருத்துவ கல்வி கிடைப்பது எளிதல்ல என்றும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% இடதுக்கீடு கொடுக்க அமைச்சரவை கூடி முடிவெடுக்க உள்ளோம் என்றார். மேலும் அரசு மருத்துவ கல்லூரியில் வருடத்திற்கு ரூ.10,000 தான் வாங்கப்படுகிறது. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களும் மருத்துவம் படிப்பதற்கு வேறு என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்து வருகிறோம். புதுச்சேரி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வர வேண்டும். படித்த கல்லூரிக்கு என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்ற வேண்டும் என ரங்கசாமி அறிவுறுத்தினார். 

மேலும் அறுவை சிகிச்சைகளை கண்டால் பலரும் பயப்படுவார்கள். ஆனால் தற்போது மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பங்கள் வந்ததால் அந்த பயம் இப்போது இல்லை.

புதுச்சேரியில் இருதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதில் மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். இங்கு படித்த நீங்கள் பெரிய மருத்துவ நிபுணர்களாக வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மேலும் புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகம், மருத்துவத்திற்கான இயக்குநரகம் கொண்டுவர வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். அதே போல் காரைக்காலிலும் அரசு மருத்துவ கல்லூரி கொண்டுவர நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com