மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஏன்? - அமைச்சர் துரைமுருகன் 

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஆச்சரியம் தான் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். 
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஏன்? - அமைச்சர் துரைமுருகன் 

வேலூர்: மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஆச்சரியம் தான் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். 

வேலூர் மாவட்டம் காட்பாடி மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் நடந்தது. கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. தேர்தல் முன்கூட்டியே நடந்தாலும் நடக்கலாம்.  இருளில் செல்லும் போது வழியில் பாம்பு வரலாம் என்ற முன் யோசனையில் கையில் கம்பு எடுத்துச் செல்வோம். அதைப்போன்று எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். 

நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் என்னை தனியாக அழைத்து யாருக்கு என்ன துறை என்று ஒதுக்கியிருக்கிறேன். உங்களுக்கு எது வேண்டுமோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு நான் நீர்வளத் துறையை எடுத்தேன். விவசாயிகள் வாழ தண்ணீர் அவசியம். விவசாயி மனம் குளிர்ந்தால், நாடு மகிழும் என்று நீர்வளத்துறையை எடுத்தேன். இது அண்ணாதுரை காலத்தில் கருணாநிதியிடம் இருந்தது, அவருக்கு பிறகு என்னிடம் இருக்கிறது.

காவிரி பிரச்னைக்காக 17 ஆண்டுகளாக நடுவர் மன்றத்தில் போராடினோம். அதன் ஒவ்வொரு அடியும் எனக்குத் தெரியும். பல அதிகாரிகள் மாறியிருக்கிறார்கள். அவர்களை விட இந்த விவகாரத்தில் என்ன இருக்கிறது? என்று எனக்குத் தெரியும். காவிரி, பெரியார், கிருஷ்ணா நதி விவகாரம் என்று பல சிக்கல் இருக்கிறது.

இதில் அந்நிய மாநிலத்துடன் நாம் ராஜதந்திரத்தை கையாள வேண்டும். கேரள, கர்நாடகத்தில் அங்கு பிரபலமான புதியவர்கள் வந்திருக்கிறார்கள். அவசரப்படக் கூடாது. அதற்காக தான் பொறுமையுடன், பணிவான பதிலை அளித்திருக்கிறோம். ஆனால், பத்திரிக்கைகளில் தான் மேகதாது குறித்து பரபரப்பாக செய்தி வருகிறது. 

மேகதாதுவில் அணை கட்ட முடியாது. ஒரு அணை கட்ட மத்திய அரசிடம் பல அனுமதிகள் வாங்க வேண்டும்?, அணையின் கீழ் பகுதி இசைவு இல்லாமல் அணையை கட்ட முடியாது, எல்லாம் எனக்குத் தெரியும். இதில் 26 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. எடுத்த எடுப்பில் எல்லாம் செய்து விட முடியாது.

காட்பாடி தொகுதிக்கு என்ன செய்ய வேண்டுமோ? அனைத்தையும் செய்திருக்கிறோம். ஆட்சிக்கு வந்தால் மக்கள் தொண்டு செய்வோம். இந்த தொகுதிக்கு தொழிற்சாலை ஒன்று வேண்டும் என்று சிப்காட் மற்றும் டைடல் பார்க் கொண்டு வர இருக்கிறோம். டெல் மற்றும் மகிமண்டலத்தில் அதற்கான இடம் இருக்கிறது. தொழில்துறை அமைச்சர் ராஜா அடுத்த மாதம் 4 ஆம் தேதி இங்கு வருகிறார். அவர் பார்வையிட்ட பிறகு எங்கு என்ன வரும்? என்று தெரியவரும்.

இந்த தொகுதியில் நுாறு ஓட்டுகளுக்கு 10 பேரை ஒதுக்கியிருக்கிறோம். 10 பேரும் ஒழுங்காக கவனம் செலுத்தினால், நுாறு ஓட்டு வரும் ஜெயித்து விடலாம். 10 பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் போனால் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த முறை அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் 56 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார், இந்த முறை 60 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். 

திமுக வரலாற்றில் இன்னும் நூறாண்டுக்குப் பிறகு கூட திமுகவில் யார், யார் பொதுச் செயலாளராக இருந்தார்கள் என்றால் காட்பாடியை சேர்ந்த துரைமுருகன் இருந்தார் என்கிற போது இந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும். பிள்ளைகள் அப்பாவை பார்த்து வாழ்த்து சொல்வதைப் போல நான் எண்ணிக் கொள்கிறேன். என் மக்களை நான் வணங்குகிறேன். ஜவகர்லால் நேரு கூறினார் என்றாவது ஒருநாள் நான் மறைந்தால் அப்பொழுது என்னை சுட்டு சாம்பலாக்கி அதை நதியில் கரைக்க கூடாது விமானத்தின் மூலம் இந்திய மண்ணில் தூவுங்கள். ஏனென்றால் நான் மண்ணுக்கு சொந்தக்காரன் என்று சொன்னார். அப்படி ஒரு சொந்தத்தை நான் காட்பாடியில் சொந்தமாக்கி வைத்திருக்கிறேன் உங்களுடைய சேவகனாக இருப்பேன் என உருக்கமாக பேசினார். 

கூட்டம் முடிந்து செல்லும்போது மணிப்பூர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்,"பிரதமர் மோடியே சொன்னார். நாடே வெட்கி தலை குனிகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஆச்சரியம் தான்,"என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com