
அமைச்சா் செந்தில் பாலாஜியை எந்த தேதி முதல் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பதை முடிவு செய்வது குறித்த வழக்கு, நீதிபதி நிஷா பானு, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு, இரு வேறு தீா்ப்புகளை வழங்கியது. இதனால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டாா்.
இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதியான சி.வி.காா்த்திகேயன் பிறப்பித்த தீா்ப்பில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பில், அமலாக்கத் துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் இல்லை என்று கூறியிருந்தாலும் கூட, அமலாக்கத் துறையினா் குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியில்லை என்று கூறவில்லை. எனவே, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு அதிகாரம் உள்ளது.
செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த இடத்தில், நீதிபதி பரத சக்கரவா்த்தியின் தீா்ப்பை ஏற்றுக்கொள்வதோடு, அதில் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது என்று நீதிபதி பரத சக்கரவா்த்தியின் தீா்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டாா்.
மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை எப்போதில் இருந்து காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்க, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வான நீதிபதி நிஷாபானு, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் பரிந்துரைத்திருந்தாா்.
இந்தப் பரிந்துரையை ஏற்று, இரு நீதிபதிகள் அமா்வுக்கு தலைமை நீதபதி ஒப்புதல் அளித்திருந்தாா். இதைத் தொடா்ந்து நீதிபதி நிஷா பானு, நீதிபதி பரத சக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.