ரூ.75 கோடி குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் ஆக.15 வரை நீடிப்பு: முதல்வர் அறிவிப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.75 கோடி குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் ஆக.15 வரை நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
ரூ.75 கோடி குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் ஆக.15 வரை நீடிப்பு: முதல்வர் அறிவிப்பு


திருச்சி:  விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.75 கோடி குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் ஆக.15 வரை நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் திருச்சியில் திருச்சி - திண்டுக்கல் சாலையிலுள்ள கோ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 3 நாள்களுக்கு வேளாண் சங்கமம்- கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இக் கண்காட்சிக்காக பிரம்மாண்ட பந்தலுடன் கூடிய திறந்தவெளி அரங்குகள் 50 மற்றும் 250 உள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூலை 27 முதல் 29ஆம் தேதி வரை இக் கண்காட்சி, கருத்தரங்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

முதல் நாள் நிகழ்வை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கிவைத்து பேசியது:

அனைத்து துறைகளும் ஒரு சேர வளர வேண்டும் என நாங்கள் உழைத்து வருகிறோம். அதில் மற்ற துறைகளை வளர்க்க நிதி வளம் மட்டும் போதும். ஆனால், வேளாண் துறைக்கு நிதி வளம் மட்டுமல்லாமல் நீர்வளம், இடு பொருட்கள் உள்ளிட்டவை போதுமான அளவு தேவை. 

திமுக ஆட்சி அமைந்த உடன் நீர்வளமும் கைக்கொடுத்தது, இடு பொருட்கள் எளிதாக கிடைத்ததால் இந்த துறை சிறப்பாக வளர்ந்து விவசாயிகளுக்கு பயன்பட்டது.

வேளாண் துறையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு உரிய தேதிக்கு முன்னதாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு 1,50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. இன்று கூடுதலாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது.

376.63 கோடி நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. கரும்பு டன் ஒன்றுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.195 வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 1000க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

1990 ஆம் ஆண்டு கருணாநிதி விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனால் ஏராளமான விவசாயிகள் பயன் அடைந்தனர்.

10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக ஆட்சியில் 2,20,000 மின் இணைப்புகள் தான் வழங்கப்பட்டது. ஆனால் திமுக இரண்டு ஆண்டுகால ஆட்சியில் 1,50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. இன்று 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

சொன்னதை செய்வோம் என்பது கருணாநிதியின் முழக்கம், சொல்லாததையும் செய்வோம் என்பது எனது முழக்கம்.

வேளாண்துறை வளர்ந்து வருகிறது என்பதை இந்த கண்காட்சி மூலம் கூறலாம்.

வேளாண் துறையில் வந்துள்ள புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கும், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கும் இது போன்ற கண்காட்சி மிக மிகத் தேவை.

தமிழ்நாடு வேளாண் துறை மட்டுமல்லாமல் மத்திய துறைகளும் இதில் பங்கெடுத்துள்ளது.

வேளாண் நம் பண்பாடாக இருந்தாலும் அது லாபம் அடையும் துறையாக மாற வேண்டும். அதற்காக தான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

உற்பத்தியாளர்களாக மட்டுமல்லாமல் விற்பனையாளர்களாக மாற வேண்டும் என்று தான் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. தற்போது அதில் அடுத்தக்கட்டமாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

வேளாண் தொழில் நிலம் வைத்திருப்பவர்கள் மட்டும்  பார்க்கும் தொழிலாக இல்லாமல் விரும்பிய அனைவரும் பார்க்கும் தொழிலாக மாற வேண்டும்.

மேலும், குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com