
என்.எல்.சி.யைக் கண்டித்து நெய்வேலியில் பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இதில் போலீஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது, நெய்வேலி காவல் ஆய்வாளர் படுகாயமடைந்துள்ளார்.
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. இந்தியா, நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் அழிக்கப்பட்டன.
இதையும் படிக்க | அமித் ஷா நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு!
இதனைக் கண்டித்து, அதாவது விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் நெய்வேலியில் இன்று(வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பாமகவினர் நிறுவனத்தை முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது போராட்டத்தின் இடையே காவல்துறையினரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் போலீசார் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதையும் படிக்க | என்.எல்.சி.யைக் கண்டித்துப் போராட்டம்: அன்புமணி ராமதாஸ் கைது
மேலும் கைது செய்யப்பட்ட அன்புமணி இருக்கும் போலீஸ் வாகனத்தை செல்லவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தனர்.
இந்த கலவரத்தில் நெய்வேலி காவல்துறை ஆய்வாளர் மற்றும் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
போராட்டம் கலவரமாக மாறியதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...