சங்கரன்கோவில் ஆடித்தவசு: திரளான பக்தர்கள் தரிசனம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் திங்கள்கிழமை ஆடித்தவசுக் காட்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தவசுக் காட்சியை கண்டு தரிசித்தனர்.
சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடித்தவசுக் காட்சியின்போது பக்தர்கள் வெள்ளத்திற்கு மத்தியில் சங்கரநாராயணரை வலம் வந்த ஶ்ரீகோமதிஅம்பாள்.
சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடித்தவசுக் காட்சியின்போது பக்தர்கள் வெள்ளத்திற்கு மத்தியில் சங்கரநாராயணரை வலம் வந்த ஶ்ரீகோமதிஅம்பாள்.
Updated on
2 min read

சங்ககரன்கோவில் : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் திங்கள்கிழமை ஆடித்தவசுக் காட்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தவசுக் காட்சியை கண்டு தரிசித்தனர்.
     
இக்கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழா மொத்தம் 12 நாள் நடக்கும். திங்கள்கிழமை 11ஆம் நாள் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான ஆடித்தவசுக் காட்சி நடைபெற்றது.

காலையில் பட்டுபரிவட்டம், அலங்கராத்திற்குரிய சாமான்கள் சகிதம், சங்கரநாராயணசுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள், சந்திரமௌலிஸ்வரர் மற்றும் மூன்று உற்சவ மூர்த்திகளுக்கும் கும்பம் அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி, அம்பாளை வழிபட்டனர்.  

சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு பகல் 12 மணிக்கு கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார்.மேளதாளத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்டு பிற்பகல் சுமார் 2  மணியளவில் மேலரத வீதியில் உள்ள தவசு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.  அங்கு அவருக்கு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து மாலையில் சுவாமி, சங்கரநாராயணராக ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி தெற்குரத வீதியில் வந்தார். அப்போது பக்தர்கள் கர கோஷம் எழுப்பி, ஆரவாரம் செய்தனர். தவசுக் காட்சிக்காக தெற்குரத வீதியில் 2 சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை மலர்கள், இளநீர், வாழைக்குருத்து போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  

தவசுக்காட்சி:

மாலை  6.42  மணிக்கு தவசுப் பந்தலுக்கு வந்த சங்கரநாராயணர் வெண்பட்டு உடுத்தியிருந்தார். அவரது முகத்திற்கு நேராக திரைப் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே மேலரதவீதி தவசு மண்டபத்தில் எழுந்தருளியிருந்த
கோமதி அம்பாள்  6.54   மணி்க்குப் புறப்பட்டு சங்கரநாராயணர் எழுந்திருளியிருந்த எதிர் பந்தலுக்கு வந்தார். அவர் பச்சைநிறப் பட்டு உடுத்தியிருந்தார். சங்கரநாராயணரை 3 முறை வலம் வந்த கோமதி அம்பாள் மீண்டும் தனது பந்தலுக்குத் திரும்பினார். அவருக்கு தேங்காய், பழம் வழங்கப்பட்டு பட்டுச் சேலை சாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து சங்கரநாராயணர் முகத்திற்கு நேராகப் போடப்பட்டிருந்த திரை விலக்கப்பட்டது. அப்போது ரிஷிப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி சரியாக மாலை    7.30  மணிக்கு சங்கரநாராயணர் திருக்கோலத்தில் அம்பாளுக்குக் காட்சிக் கொடுத்தார். இருவருக்கும் ஒருசேர தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பினர். இரவு 12 மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி, சங்கரலிங்கசுவாமியாக கோமதிஅம்பாளுக்குக் காட்சிக் கொடுக்கிறார்.

ஆடித்தவசுக்காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். கோயிலுக்குள்ளும், காட்சி நடக்கும் இடத்திலும் பக்தர்கள் செல்வதற்கு மிகவும் சிரமம்பட்டனர். அவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு போலீசார், நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள்,ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த பெண் பக்தர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உதவி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com