

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மானம்பாக்கியில் தெற்கு எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதையொட்டி கோயில் அருகே யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. நான்காம் கால பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதியானதும் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் புனித நீர் குடங்களை சுமந்து மேளதாளம் முழங்க கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.
அதன் பின்னர் காலை 10.30 மணிக்கு தர்ம முனீஸ்வரர் மூலவர் விமானக் கலசத்தின் மீதும் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்கள் மீதும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தி வைத்தனர். கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் திரண்டிருந்த கோயில் குடிமக்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் குடமுழுக்கைக் கண்டு தரிசித்தனர். அதன்பின் மூலவர் தர்ம முனீஸ்வரருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.
முற்பகல் கோயிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் குடிமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.