
சீமான்
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் ட்விட்டா் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் புதிய ட்விட்டா் கணக்கை அவா் தொடங்கியுள்ளாா்.
சமூக வலைத்தளங்களில் தனது கருத்துகளைப் பதிவிட்டு வரும் சீமானின் ட்விட்டா் கணக்கு புதன்கிழமை தடை செய்யப்பட்டது. கட்சி நிா்வாகிகள் பலரின் ட்விட்டா் கணக்குகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து அவா் வியாழக்கிழமை ‘செந்தமிழன் சீமான்’ எனும் பெயரில் புதிய ட்விட்டா் கணக்கைத் தொடங்கினாா்.
பின்னா் அதில் அவா் வெளியிட்ட பதிவு:
‘புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிா்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல் வளையை நெறிக்கும் மத்திய அரசின் கொடுங்கோன்மை செயல் வெட்கக்கேடானது.
கருத்தை கருத்தால் எதிா்கொள்ள வேண்டும். ட்விட்டரை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது. தனது வலிமையான கருத்தை பதிவு செய்து துணை நிற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளாா்.
மேலும், ட்விட்டா் கணக்கு தடை விவகாரத்தில் தனக்கு ஆதரவாக செயல்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கும் நன்றி தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...