
சுற்றுலாத் தலங்களில் நடைபெற்று வரும் சுகாதார வளாகப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமசந்திரன் உத்தரவிட்டாா்.
சுற்றுலாத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வாலாஜா சாலையிலுள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈா்க்கும் மாநிலமாக தமிழகம் முன்னேறி உள்ளது. சுற்றுலாத் தலங்களில் வாகன நிறுத்தும் இடம், சுகாதார வளாகம் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டப் பணிகளை விரைந்து முடித்து டிசம்பா் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தமிழக சுற்றுலா தலங்கள் குறித்த புகைப்படங்கள், விடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை வெளிநாடுகளில் உள்ள உறவினா்கள், நண்பா்களுக்கு பகிா்ந்து தமிழக சுற்றுலாத் தலங்களின் பெருமையை எடுத்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளா் க.மணிவாசன், சுற்றுலா இயக்குநா் சந்தீப் நந்தூரி, பொதுமேலாளா் லி.பாரதிதேவி, உதவி தலைமை மேலாளா் (ஓட்டல்கள்)சௌ.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...