முதல்வரின் சேலம் பயணம்: விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு!

சேலம் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.
முதல்வரின் சேலம் பயணம்: விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு!
Updated on
1 min read

சேலம்: சேலம் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகின்ற ஜூன் 11 அன்று வருகை தரவுள்ளதையொட்டி, கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் நேரு பேசுகையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் முதலமைச்சர் வருகின்ற 11.06.2023 அன்று சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்து முன்னதாக அண்ணா பூங்கா அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து சேலம் பழைய பேருந்து நிலையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்க உள்ளார்கள்.

மேலும், சேலம் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம், அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டடம், சீர்மிகு நகரத் திட்டம், மறு சீரமைப்புப் பணிகள், பள்ளப்பட்டி ஏரி புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய பாலப் பணிகள் உட்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளைத் துவக்கி வைக்க உள்ளார்கள்.

இதற்குரிய முன்னேற்பாடு பணிகளை இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் விழா நடைபெறவுள்ள இடத்தினை ஆய்வு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஜூன் 12 காலை காவிரி டெல்டா பகுதி வேளாண் பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com