
கோப்புப் படம்
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,
ஜூன் 5ம் தேதி மாலை 5.30 மணியளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காலை 5.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமான அதே இடத்தில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
ஜூன் 6 முதல் ஜூன் 10 வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
ஜூன் 6, ஜூன் 07-யில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
சென்னையை பொருத்தவரை..
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கு..
ஜூன் 6 கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...