காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பழமையும், வரலாற்றுச் சிறப்பும், அத்திவரதர் புகழுக்கும் உரியது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயார் சமேத தேவராஜசுவாமி திருக்கோயில். இக்கோயில் வைகாசித் திருவிழா கடந்த மே மாதம் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவை நிகழ் மாதம் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமி அதிகாலையில் ஆலயத்திலிருந்து கேடயத்தில் தேரடிக்கு எழுந்தருளினார். சுவாமி தேரில் அமர்ந்தவுடன் பக்தர்கள் பலரும் தேரில் அமர்ந்திருக்கும் பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். தேரடியில் உள்ள படிகள் வாயிலாக தேருக்குள் சென்று பெருமாளை தரிசித்தனர். 

தேர்த் திருவிழாவை முன்னிட்டு நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. தேரை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறை அமைச்சர் தா .மோ. அன்பரசன் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தார். தேரோட்ட விழாவில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, கோயில் செயல் அலுவலர்கள் சீனிவாசன் தியாகராஜன் ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். 

தேர்த் திருவிழாவில் காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர்த் திருவிழாவினையொட்டி பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் வர்த்தக நிறுவனங்கள் பலவும் தேரோடும் வீதிகளில் அன்னதானம் செய்தனர்.

ஜூன் 8 ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவம்  நடைபெறுகிறது. மறுநாள் 9 ஆம் தேதி பெருமாள் வெட்டி வேர் சப்பரத்தில் வீதியுலா வருவதுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com