சென்னை ஸ்டான்லி உள்பட 3 மருத்துவ கல்லூரிகள் செயல்பட அனுமதி!

சென்னை ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரி உள்பட தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டான்லி மருத்துவமனை
ஸ்டான்லி மருத்துவமனை


சென்னை ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரி உள்பட தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிசிடிவி கேமரா, பயோ மெட்ரிக் வருகைப் பதிவு உள்ளிட்ட சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக மாநில அரசுக்கு தாக்கீது அனுப்பியிருந்தது. இதனால், முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பரவியது.

ஆனால், தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதே வேளையில், மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகாமல் இருக்க, தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டியிருந்த குறைபாடுகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைமையகத்துக்கு மேல் முறையீடு செய்தும், அதற்கு அடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் முறையிட்டும் தமிழக அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து, குறைபாடுகள் சரி செய்யப்பட்டிருக்கிறதா என்றும் நேரில் ஆய்வு செய்துச் சென்றிருந்தனர்.

இந்த ஆய்வு குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாயன்று பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்: சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் சாதனங்கள், சிசிடிவி கேமராக்கள் குறித்த விவரங்களை, சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்கள் தில்லியில் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளிடம் சமா்ப்பித்துள்ளனா்.

அதன் அடிப்படையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனா். இதுபோன்ற காரணங்களுக்காக கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது. எனவே, இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை.

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு முதல் சுற்று நிறைவடைந்தவுடன் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். 

தமிழக அரசு தரப்பில் தேசிய மருத்துவ ஆணையத்தையும், மத்திய சுகாதாரத் துறையையும் ஒன்றன் பின் ஒன்றாக அணுகி மேல் முறையீடு செய்த நிலையில், மூன்று கல்லூரிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com