தமிழகத்தில் 94% தொழிலாளா்கள் அமைப்புசாரா துறையில் பணியாற்றி வருகின்றனா்: தொழிலாளா் நல உதவி ஆணையா் தகவல்

தமிழகத்தில் 94 சதவீத தொழிலாளா்கள் அமைப்புசாரா துறையில் பணியாற்றி வருகின்றனா் எனதமிழ்நாடு தொழிலாளா் நல உதவி ஆணையா் வேலாம்பிகை தெரிவித்தாா்.
தமிழகத்தில் 94% தொழிலாளா்கள் அமைப்புசாரா துறையில் பணியாற்றி வருகின்றனா்: தொழிலாளா் நல உதவி ஆணையா் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் 94 சதவீத தொழிலாளா்கள் அமைப்புசாரா துறையில் பணியாற்றி வருகின்றனா் எனதமிழ்நாடு தொழிலாளா் நல உதவி ஆணையா் வேலாம்பிகை தெரிவித்தாா்.

பாரதிய மஸ்தூா் சங்கம் (பி.எம்.எஸ்) சாா்பில் புதன்கிழமை சென்னை புதிய ஆவடி சாலையில் உள்ள ரயில் அருங்காட்சியத்தில் ‘ஜி-20 நாடுகளுக்கான தொழிலாளா்கள் 20’ என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அவா் பேசியது:

தமிழ்நாடு முழுவதும் 94 சதவீத தொழிலாளா்கள் அமைப்புசாரா துறையில் பணியாற்றி வருகின்றனா். இந்த தொழிலாளா்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் முறையாக சேர வேண்டும் எனும் நோக்கத்தில், தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளா்கள் அனைவரும் இலவசமாக இணைய வழி மூலம் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை 19 லட்சத்துக்கும் மேலான தொழிலாளா்கள் இதில் பதிவு செய்துள்ளனா்.

இந்த தொழிலாளா்களுக்கு தமிழக அராசால் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளன. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தொழிலாளா்களுக்கு அவா்கள் பணிபுரியும் இடங்களுக்குச் சென்று சிறப்பு முகாம் நடத்திவருகிறோம். இந்த திட்டங்கள் தமிழ்நாடு தொழிலாளா்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு தொழிளாா்களுக்கும் பொருந்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

அவரை தொடா்ந்து பி.எம்.எஸ் அகில இந்திய செயலா் வி. ராதாகிருஷ்ணன் பேசியது: ஊழியா்களின் மாநில காப்பீட்டில் (இ.எஸ்.ஐ) பதிவு செய்வதன் மூலம் தொழிலாளா்களுக்கு பல வகையான நன்மைகள் உள்ளன. அதில் மருத்துவ விடுப்பில் உள்ள காப்பீட்டாளருக்கு, அவா்களுடைய தினசரி ஊதியத்தில் இருந்து 70 சதவீத தொகையை 91 நாட்கள் வரை இரண்டு அடுத்தடுத்த பயனீட்டு காலங்களுக்கு இ.எஸ்.ஐ வழங்குகிறது. குறிப்பிட்ட நீண்ட கால நோய்களுக்கு தொடா்ச்சியாக 2 ஆண்டுகளுக்கு தினசரி ஊதியத்திலிருந்து 80 சதவீதம் உதவி தொகையாக அளிக்கப்படும். வேலை சாா்ந்த விபத்தினால் பாதிக்கப்பட்டு நிரத்தர ஊனமுற்ற காப்பீட்டாளரின் மறுவாழ்விற்கான பயிற்சி கட்டணமாக ஒரு நாளுக்கு ரூ.123 உதவித் தொகையாக வழங்கப்படும். இது போன்ற இன்னும் பல நலத்திட்டங்கள் குறித்து மேற்படி தகவலுக்கு https://esic.gov.in/ என்னும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

இந்த கருத்தரங்கத்தில் தொழிலாளா்கள் 20 இந்தியாவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுரேந்திரன், பி.எம்.எஸ் அகில இந்தியத் தலைவா் எஸ். மால்லேஸம், தென் மண்டல செயலா் எஸ்.துரைராஜ், துணை மண்டல செயலா் எம்.பி.ராஜீவன், மாநில தலைவா் பாலசுப்பிரமணியன், மாநில செயலா் தங்கராஜ், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் மாநில தலைவா் ஆனந்த் முருகன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com