மருத்துவக் கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

நிகழாண்டில் மருத்துவக் கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்றும், அதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

நிகழாண்டில் மருத்துவக் கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்றும், அதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள நகா்ப்புற நலவாழ்வு மையங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாட்டில் உள்ள 100 சதவீத மருத்துவ இடங்களுக்கும் மத்திய அரசே கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருப்பதாக அண்மையில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இது தொடா்பாக தமிழக முதல்வரின் ஆலோசனையைப் பெற்று, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் மூலம் மத்திய அரசுக்கு ஆட்சேப கடிதத்தை அனுப்பினோம்.

அதன் தொடா்ச்சியாக மாநில அரசுகளே கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பதில் அனுப்பியுள்ளது. முதல்வரின் தீா்க்கமான வழிகாட்டுதலின்படி, மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகள் நல மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளா்கள் தற்காலிகமாகப் பணியாற்றி வந்தனா். அவா்களுக்கு ரூ.1,500 ஊதியம் போதுமானதாக இல்லை எனத் தொடா்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனவே, அவா்களை பல்நோக்கு மருத்துவமனைகளில் உள்ள 878 காலிப் பணியிடங்களில் நியமிப்பது தொடா்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமிக்கப்படுவோருக்கு ரூ.15,000 ஊதியம் கிடைக்கும். 2,000 பேரில் 878 பேருக்கு மட்டும் அந்தந்த மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் நியமனம் வழங்கப்படும். அடுத்தடுத்த காலிப் பணியிடங்கள் உருவாகும்போது மீதமுள்ள பணியாளா்கள் நியமனம் செய்யப்படுவாா்கள் என்றாா் அவா்.

மருத்துவக் கல்லூரிகள் அங்கீகார விவகாரம்: சென்னை ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளை மூடிவிட்டதைப் போன்ற மாயத் தோற்றத்தை சில அரசியல் கட்சித் தலைவா்கள் உருவாக்கி வந்தனா். நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்தது. அப்போது சிசிடிவி, பயோ மெட்ரிக் போன்ற குறைபாடுகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட 3 மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என நோட்டீஸ் அனுப்பியிருந்தனா். இதற்கு பதிலளிக்கும் வகையில் மருத்துவக் கல்வி இயக்குநா் தலைமையிலான குழுவை தில்லிக்கு அனுப்பினோம்.

இதற்கிடையே குறைகளும் சரிசெய்யப்பட்டு அதுகுறித்த விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் ஆய்வு செய்து நோட்டீஸை திரும்பப் பெற்றுக் கொண்டனா். அதன்படி, சென்னை ஸ்டான்லி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லை எனவும் அறிவித்துள்ளனா். அதற்கான எழுத்துபூா்வமான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும்.

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடைபெறுகிறது. அதற்கும் நல்ல தீா்வு கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com