திருச்சியில் ரேஷன் கடை ஊழியர் அடித்து கொலை: ஜல்லிக்கட்டு காளை விவகாரத்தில் சகோதரர்கள் ஆத்திரம்

திருச்சியில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்த விவகாரத்தில் ரேஷன் கடை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


திருச்சி: திருச்சியில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்த விவகாரத்தில் ரேஷன் கடை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள பூவாளூரைச் சேர்ந்தவர் தமிழரசன் (50). இவர் தனது மனைவியின் சொந்த ஊரான சோமரசம்பேட்டை அருகேயுள்ள புங்கனூர் கீழத் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 

அதே பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தாற்காலிக எடையாளராக பணியாற்றி வந்தார்.

அவரது மகன் பிரசாந்த் (27) ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இதேபோல் அவர்களது உறவினர்களான புங்கனூர் மேலத்தெருவை சேர்ந்த முத்துவீரன் மகன்கள் சரத்குமார்(26) ரஞ்சித்(24) ஆகியோரும் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, புங்கனூர் - அல்லித்துறை பிரதான சாலையில் அமைந்துள்ள ஒரு தேநீரகம் அருகே பிரசாந்த் அவர் தந்தை தமிழரசனுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரும் பிரசாந்தை பார்த்து, உனது ஜல்லிக்கட்டு காளை ஆட்டுக்குட்டி போன்று உள்ளது, அது காளையா? அதை எளிதில் அடக்கி விடுவோம் எனக் கூறி கிண்டல் செய்துள்ளனர்.

இதை பிரசாந்த் தட்டிக் கேட்டார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சகோதரர்கள் சரத்குமார், ரஞ்சித் இருவரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றுள்ளனர். 

அப்போது, பிரசாந்தின் தந்தை தமிழரசன் அவர்களை தடுத்துள்ளார். இதில் தமிழரசனின் நெஞ்சில் அடி  விழுந்ததையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை இருசக்கர வாகனத்தில் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சகோதரர்கள் சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com