

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த ஏப்.29 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்ப அளவு தொடா்ந்து பதிவானதால், பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா்.
தொடா்ந்து, வெயிலின் தாக்கம் குறையாததால் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் திறக்கப்படுவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் (2023-2024) 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்காக பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. முதல்நாளான இன்று மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.
சென்னை விருகம்பாக்கம் மகளிர் பள்ளியில் மாணவிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்றார். அப்போது மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் பாடநூல், சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் வழங்கினார். பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவா்களுக்கு பாடநூல்கள், நோட்டு - புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட விலையில்லா பொருள்கள் வழங்கப்படவுள்ளன. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் ஒரு பாடத்துக்கு 4 மணி நேரம் வரை பற்றாக் குறை ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, பாடங்களை நடத்த வசதியாக சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.