நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக சங்கத்தின் செயல் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

விழுப்புரம்: தங்களின் 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளர்கள் சங்கம் இன்று முதல், மூன்று நாள்கள் மேற்கொள்ளவிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக சங்கத்தின் செயல் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ”பொதுவிநியோகத் திட்டத்துக்குத் தனித்துறையை அமைக்க வேண்டும். சரியான எடையில் பொருள்களை வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் பொருள்களுக்குத் தனி ரசீதும், மாநில அரசு வழங்கும் பொருள்களுக்குத் தனி  ரசீது என்ற நிலையை மாற்றி, ஒரே ரசிதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிபுரியும் பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் கோடிக்கணக்கில் மோசடி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடைப் பணியாளர் சங்கம் போராட்டம் நடத்திய போது அரசு பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தது. நிகழாண்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும், சென்னையில் கடந்த 9- ஆம் தேதி ஆர்ப்பாட்டம், மறியல் நடத்தியும் அரசு எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. எனவே உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என் கோரிக்கை உள்பட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜூன் 14 முதல் 16 - ஆம் தேதி வரை தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர் சங்கம் அறிவித்திருந்தது.

ஆனால், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்படுகிறது. ஜூலை முதல் வாரத்தில் கூடி, போராட்டம் குறித்து முடிவு செய்யபட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும்”, என்று கூறினார்.

பேட்டியின் போது சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநிலச் செயலர் ஏ.சி.சேகர், விழுப்புரம் மாவட்டத் தலைவர் சம்பத், பொருளாளர் ரஷீத், மாநில அமைப்புச் செயலர் வே.சிவக்குமார், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலப் பொருளாளர் ஜெய கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com