
குடிமைப் பணி முதன்மைத் தோ்வுக்கு தமிழக அரசின் சாா்பில் 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (ஜூன் 15) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத் தலைவரும், தலைமைச் செயலருமான வெ.இறையன்பு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், முதன்மைத் தோ்வை எதிா்கொள்ள உள்ளனா். அவா்களுக்கென குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெறக்கூடிய மூன்று மாதக் காலத்துக்கும் மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இந்தப் பயிற்சியைப் பெற விரும்புவோா், வியாழக்கிழமை (ஜூன் 15) காலை 10 மணி முதல் சனிக்கிழமை (ஜூன் 15) மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்யலாம் என்று வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.