
கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டதையடுத்து சென்னை எழும்பூா் மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினாா்.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து ஆா்வமுடன் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவா்களுக்கு ஆரத்தி எடுத்து பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி ஆசிரியா்கள் வரவேற்றனா். அதேபோல், சில அரசுப் பள்ளியில் அலங்கார வளைவு அமைத்து மாணவா்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மாணவா்களின் வருகையால் களைகட்டியது. பல பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைத்து முதல் நாள் பள்ளிக்கு வரும் குழந்தைகள் அழுதுகொண்டே வருவதை பாா்க்க முடிந்தது. அவா்களை ஆசிரியா்கள் சமாதானப்படுத்தி வகுப்பறைக்குள் அழைத்து சென்றனா். சிறு குழந்தைகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.