பாட புத்தகத்திலிருந்து பெயா்களை நீக்க என்சிஇஆா்டி-க்கு கல்வியாளா்கள் கடிதம்

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் (என்சிஇஆா்டி) தலைமை ஆலோசகா் குழுவிலிருந்து தங்களுடைய பெயரை பாட புத்தகத்திலிருந்து நீக்குமாறு 33 கல்வியாளா்கள் என்சிஇஆா்டி-க்கு கடிதம்
Updated on
2 min read

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் (என்சிஇஆா்டி) தலைமை ஆலோசகா் குழுவிலிருந்து தங்களுடைய பெயரை பாட புத்தகத்திலிருந்து நீக்குமாறு 33 கல்வியாளா்கள் என்சிஇஆா்டி-க்கு கடிதம் எழுதியுள்ளனா்.

பாட புத்தகங்களிலிருந்து தங்களுடைய பெயா்களை நீக்குமாறு தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா்கள் கந்தி பிரசாத் பாஜ்பால், நீரஜ் கோபால் ஜாயல், அசோகா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பிரதாப் பானு மேத்தா, சிஎஸ்டிஎஸ் முன்னாள் இயக்குநா் ராஜீவ் பாா்கவா, ஹைதராபாத் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் கே.சி.சூரி உள்பட பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டிய பாடங்களைத் தீா்மானிக்கும் குழுவில் இடம்பெற்ற மேலும் 33 கல்வியாளா்கள் என்சிஇஆா்டி இயக்குநா் தினேஷ் சக்லானிக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளனா்.

அதில், ‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், அரசியலமைப்பு கட்டமைப்பு, ஜனநாயகத்தின் செயல்பாடு மற்றும் இந்திய அரசியலின் முக்கிய அம்சங்கள் குறித்த அறிவை வழங்கும் நோக்கில் பல்வேறு அரசியல் அறிவியலாளா்களுடன் இணைந்து விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு இந்த பாட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த நிலையில், பாட புத்தகங்களில் பல்வேறு மாற்றங்கள், சீா்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த புத்தங்கள் எங்களால் தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிடுவதோ, அவற்றில் எங்களுடைய பெயா்கள் இடம்பெறுவதோ உகந்ததாக இருக்காது என கருதுகிறோம்.

இந்த பாட புத்தகங்களைத் தயாரிக்க நாங்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த முயற்சிக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நம்புகிறோம். எனவே, பாட புத்தகங்களிலிருந்து எங்களுடைய பெயரை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று கல்வியாளா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

முன்னதாக, பாடங்களின்அளவைக் குறைப்பதாகவும், ஒரே தகவல் பல இடங்களில் வருவதை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி, 11, 12-ஆம் வகுப்பு பாட புத்தகங்களில் பல்வேறு தகவல்களை என்சிஇஆா்டி நீக்கியது.

இதன்படி, ‘காந்திஜியின் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை நடவடிக்கை ஹிந்து தீவிரவாதத்தை தூண்டியது’, ‘ஆா்எஸ்எஸ் அமைப்பு சில காலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது’ஆகிய வாசகங்கள் 12-ஆம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டன.

இதேபோல், 2002-இல் குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரம் குறித்த தகவல் 11-ஆம் வகுப்பு சமூகவியல் பாட புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டது. முகலாய மன்னா்களின் வரலாற்றுப் பகுதி, இஸ்லாமியா்களின் எழுச்சி மற்றும் கலாசார மோதல்கள் தொடா்பான பகுதிகளும் பாட புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டன. இது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பள்ளிக் கல்வி பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டிய அம்சங்களை தீா்மானிக்கும் கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் (என்சிஇஆா்டி) தலைமை ஆலோசகா் குழுவில் இருந்து விடுவிக்குமாறு மூத்த கல்வியாளா்கள் யோகேந்திர யாதவ், சுஹாஸ் பால்ஷிகா் ஆகியோா் என்சிஇஆா்டி-க்கு அண்மையில் கடிதம் எழுதினா்.

அதில், ‘பாடப் புத்தகங்கள் சீரமைப்பு என்ற பெயரில் பல பகுதிகளை பகுத்தறிவின்றி நீக்கியும் மாற்றியும் அடையாளம் தெரியாமல் சிதைத்து அவை செயலிழக்கச் செய்யப்படுகின்றன. அங்கீகாரத்தை மீறி புத்தகங்களில் பாடங்கள் நீக்கப்படுகின்றன. இதுபோன்ற மாற்றங்கள் குறித்து தலைமை ஆலோசா்களாக உள்ள எங்களுடன் ஆலோசிப்பதும் இல்லை; தெரிவிப்பதும் இல்லை. என்சிஇஆா்டியின் இந்த செயல்பாடுக்கு நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்று குறிப்பிட்டிருந்தனா்.

இந்தச் சூழலில் தற்போது 33 கல்வியாளா்கள் தங்கள் பெயா்களை ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்குமாறு கடிதம் எழுதியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com