
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியிருக்கிறார்.
பணமோசடி புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலக அறை உள்பட 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
பின்னர் விசாரணைக்காக பசுமைவழிச் சாலையிலுள்ள அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்றபோது செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்ததால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவி நீக்கம் செய்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தார். அதனால் தான் அவர் தக்க விசுவாசத்தை காட்டியுள்ளார் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மேலும் 2016ல் தலைமை செயலாளர் அறையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதை சட்டம் தன் கடமையை செய்கிறது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது தலைமைச்செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனையால் துடிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.