
அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட நிலையில், நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலியில் பேசியதாவது:
“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை.
பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா.
செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை நடத்துவதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை. அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதுவும் 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். அதுவும் இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர். அப்படிப்பட்டவரை, ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபோது, முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும், அது தொடர்பாக விளக்கமளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். அதற்குப் பிறகும் 18 மணி நேரமாக அடைத்து வைத்துள்ளனர். யாரையும் சந்திக்க அனுமதி இல்லை. இறுதியாக அவருக்கு உடல்நலம் முழுமையாக பாதிக்கப்பட்டு இதயவலி அதிகமான பின்னர்தான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதிலும் அலட்சியம் காட்டி இருந்தார்கள் என்றால், அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன அவசரம். அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா? அப்படித்தான் இருக்கிறது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பாஜகவை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள். பாஜகவின் அரசியலே மக்கள் விரோத அரசியல்தான்.
கருத்தியல் ரீதியாக, அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ- என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி. அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி. இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்.
மேற்கு வங்கம், தில்லி, கர்நாடகம், சத்தீஸ்கர், பிகார் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சோதனை செய்கிறார்கள். ஆனா, உத்தரப்பிரதேசத்தில் மத்தியப் பிரதேசத்தில், குஜராத்தில் எல்லாம் ரெய்டு நடத்தப்படாது. ஏனென்றால், அங்கே எல்லாம் ஆட்சியில் இருப்பது பாஜக. அந்த மாநிலங்கள் எல்லாம் வருமான வரித்துறைக்கோ, அமலாக்கத் துறைக்கோ, மத்தியப் புலனாய்வுத் துறைக்கோ தெரியாது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், முந்தைய பத்து ஆண்டுகளில் அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 112-தான். ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், பா.ஜ.க.-வின் எதிர்க்கட்சிக்கார்களின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்னவோ வெறும் 0.05 விழுக்காடுதான்.
தமிழ்நாட்டில் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. என்று ஒரு கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியை தங்களின் கொத்தடிமைகளாக ஆக்குவதற்கு கடந்த 2016, 2017, 2018-ஆம் ஆண்டுகளில் பல்வேறு ரெய்டுகளை இதே பா.ஜ.க. ஆட்சி நடத்தி உள்ளது. ரெய்டு நடத்தினார்களே, எந்த வழக்கையாவது நடத்தினார்களா. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்களா? தண்டனை வாங்கித் தந்தார்களா.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ரெய்டு நடத்தி குற்றப்பத்திரிக்கையை வரிசையாகத் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறோம். வழக்குப் பதிவு செய்துகொண்டு இருக்கிறோம். இவற்றில் எல்லாம் விசாரணை நடத்த ஏன் அமலாக்கத்துறை வரவில்லை. எல்லா ஆதாரங்களையும் தருகிறோம். அவர்கள் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தத் தயாரா?
தி.மு.க. நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இல்லை என்றால் தில்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். சீண்டிப் பார்க்காதீர்கள். தி.மு.க.வையோ - தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை.” என்று தெரிவித்துள்ளார்.