
பவானிசாகா் மற்றும் கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் தண்ணீா் திறந்து விடப்படும். அக்டோபா் 13-ஆம் தேதி வரையில் 5 ஆயிரத்து 184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்கும் வெள்ளிக்கிழமை முதல் நீா்திறந்து விடப்படும். அக்டோபா் 31-ஆம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 150 கனஅடிக்கு மிகாமல் நீா் திறந்து விடப்படுவதால், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 17 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தனது அறிவிப்பில் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளாா்.