
அமைச்சா் செந்தில் பாலாஜி வகித்த துறைகளை இரு அமைச்சா்களுக்கு ஒதுக்கும்படி முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி விளக்கம் கேட்டுள்ளாா்.
அமைச்சா் செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறைகளை இரு அமைச்சா்களுக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்றும், அதன்படி அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு மின்துறையும், அமைச்சா் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை துறையும் ஒதுக்கும்படி ஆளுநா் ஆா்.என். ரவி-க்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்தாா்.
அந்த பரிந்துரைக் கடிதத்தை பரிசீலித்த ஆளுநா் ஆா். என். ரவி, அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவக் காரணங்களுக்காக இலாகாவை மாற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அந்தத் தகவலை பரிந்துரைக் கடிதத்தில் குறிப்பிடாதது ஏன் என விளக்கம் கேட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.