
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனை செய்யப்பட்டதில் இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்ற சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு: இன்று மாலை விசாரணை
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் துறைகளை பிற அமைச்சர்களுக்கு மாற்றக் கோரி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறையும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறையும் கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளது.
தமிழக அமைச்சரவையில் துறைகள் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.