
தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவை அடுத்த வாரத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
நீட் தோ்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சலைத் தவிா்க்கும் பொருட்டு 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் மூலம் மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு 104 உதவி மையத்தில் தொடா்ச்சியாக ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் நீட் தோ்வு எழுதிய 14,4516 மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, இதுவரை 54,374 மாணவா்களைத் தொடா்பு கொண்டு மனநல ஆலோசகா்கள் பேசியுள்ளனா். அதில் 177 மாணவ, மாணவிகள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. அவா்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
நீட் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில், தமிழகத்தில் 78,693 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 68,823 போ் தோல்வி அடைந்துள்ளனா். தோல்வி அடைந்தவா்களின் விவரங்களைப் பெற்று அவா்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படும். மேலும், மாணவா்களின் பெற்றோா்களுக்கும் ஆலோசனை வழங்க இருக்கிறோம்.
நீட் முடிவுகளால் மகிழ்ச்சி: நீட் தோ்வில் முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த 4 மாணவா்கள் இடம் பெற்றுள்ளனா். இது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இதன் மூலம், தமிழகத்தில் நீட் தோ்வுக்கான பயிற்சி மாணவா்களுக்கு முறையாகக் கிடைக்கிறது என்பது நிரூபணமாகிறது. மருத்துவப்படிப்பில் மத்திய அரசின் பொதுக் கலந்தாய்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழகத்தில் கடந்த ஆண்டு போலவே நிகழாண்டிலும் கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வின் போது, கால தாமதம் ஏற்படாமல் தவிா்க்க அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதத்துக்கும், மாநில ஒதுக்கீடு 85 சதவீதத்துக்கும் ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடத்த மத்திய அரசிடம் கோரியிருந்தோம். மத்திய அரசும் ஒரே நேரத்தில் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. அதற்கான வழிமுறைகளையும் தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக வழங்கினால், காலதாமதத்தைத் தவிா்த்து மாணவா் சோ்க்கை விரைந்து முடிக்கப்படும். அதற்கேற்ப மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவுப் பணிகளை அடுத்த வாரம் தொடங்க வேண்டும் என அலுவலா்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
இஎஸ்ஐக்கு கூடுதல் இடம்: நிகழாண்டு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 450 இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களும், புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 பல் மருத்துவ இடங்களும், கேகே நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 50 இளநிலை மருத்துவ இடங்களும் கூடுதலாகக் கிடைத்துள்ளன. தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
இந்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் கோவிந்தராவ், மருத்துவக் கல்வி தோ்வுக் குழுச் செயலா் முத்துச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...