வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் உரிமை பறிபோகிறது: எம்.எல்.ஏ வேல்முருகன் பேச்சு

வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் உரிமை பறிபோகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான தி.வேல்முருகன் தெரிவித்தார். 
வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் உரிமை பறிபோகிறது: எம்.எல்.ஏ வேல்முருகன் பேச்சு

சேலம்: வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் உரிமை பறிபோகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான தி.வேல்முருகன் தெரிவித்தார். 

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் யுவராஜ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் செந்தில்குமார், முத்துலட்சுமி வீரப்பன், கண்ணன், ஜோதி குமரவேல், மாரிமுத்து, சுடலை, முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

அவர் பேசும் போது: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. தங்களுடைய மக்களுக்காக அணை கட்டுவதில் உறுதியாக உள்ளனர். ஆனால் நம்மிடம் அந்த உணர்வு இல்லை. இந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பாசாங்கு செய்கிறது. நீதிமன்ற தீர்ப்பின்படி, நியாயமான தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். காவிரி உரிமை மறுத்தால், தஞ்சை வறண்டு 12 லட்சம் ஏக்கர் நிலம் பயிரிட வாய்ப்பில்லாமல் போகும் என்றார். 

மேலும் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தால், தமிழர்களின் உரிமை, வணிகம், வேலைவாய்ப்பு பறிபோகிறது. தமிழகத்தில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.

அமலாக்கதுறை தலைமைச் செயலகத்திற்கு வருவதற்கு முன்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். அத்துமீறி அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு ஆளுநரை வைத்து தமிழக மக்களையும் தமிழர்களையும் தமிழக அரசையும் சீண்டி பார்க்கிறது. இது ஒருபோதும் நடக்காது. தமிழக வாழ்வுரிமை கட்சியை பொறுத்த வரை தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்போம்.  திமுக கூட்டணியாக இருந்தாலும் அதிமுக, பாஜகவாக இருந்தாலும் தவறுகளை சுட்டிக்காட்டுவது தான் எங்கள் கட்சியின் கொள்கை என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் வாழ்வாதாரம் நாளுக்குநாள் பறிபோய் கொண்டிருக்கிறது. இதனை இன்றைய அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே அரசியல் கட்சியினர், ஜாதி கட்சியினர் தங்களின் கொள்கைகளை மறந்து தமிழகம் என்ற ஒற்றைக் கருத்தை மனதில் வைத்து தமிழர்களின் உரிமைக்காக போராட முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என மத்திய அரசை எச்சரிப்பதாகவும், தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் இதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி எந்த நிலைக்கும் செல்லும் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com