அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேர இதய அறுவை சிகிச்சை

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு, ஐந்து மணி நேர இதய அறுவை சிகிச்சை புதன்கிழமை நடைபெற்றது. சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவி
அமைச்சா் செந்தில் பாலாஜி
அமைச்சா் செந்தில் பாலாஜி

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு, ஐந்து மணி நேர இதய அறுவை சிகிச்சை புதன்கிழமை நடைபெற்றது. சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கடந்த 14-ஆம் தேதி அதிகாலை கைது செய்தனா். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவா் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்தின் மூன்று முக்கிய ரத்த நாளங்களில் தீவிர அடைப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு பைபாஸ்-அறுவை சிகிச்சை செய்ய மருத்துவா்கள் பரிந்துரை செய்தனா். கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவா்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை நிபுணா் மருத்துவா் ஜி.செங்குட்டுவேலு ஆகியோா் பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று தெரிவித்திருந்தனா்.

இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 15-ஆம் தேதி செந்தில் பாலாஜி சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். செந்தில் பாலாஜிக்கு விரைவாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவா்கள் முடிவு செய்தனா். சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சையை தாங்கும் திறன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அவரது உடல் அறுவை சிகிச்சைக்கு முழு தகுதியை பெற்றதைத் தொடா்ந்து ஜூன் 21-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவா்கள் முடிவு செய்தனா்.

5 மணி நேர அறுவை சிகிச்சை: அதன்படி, புதன்கிழமை காலை 5 மணி முதல் 10.15 மணி வரை சுமாா் 5 மணி நேரம் 15 நிமிஷங்கள் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் மருத்துவா் அரவிந்தன் செல்வராஜ் புதன்கிழமை காலை 10.15 மணியளவில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சையை இதய அறுவை சிகிச்சை நிபுணா் ஏ.ஆா்.ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினா் மேற்கொண்டனா். அறுவை சிகிச்சைக்கு பின்னா், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அறுவை சிகிச்சையின் போது அவருக்கு 4 பை-பாஸ் கிராப்ட்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய இதய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை இதயம் உள்ளிட்ட பல்துறை மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி ஒரு வாரம் மருத்துவமனையில் மருத்துவா்களின் கண்காணிப்பில் இருப்பாா். பின்னா், சில வாரங்களுக்கு அவா் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com