தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அலுவலகம் முன் குத்தகை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

மன்னர்கள் காலம் முதல் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், ஏலம் விடுவதைக் கைவிடக் கோரி அரண்மனை தேவஸ்தான அலுவலகம் முன் குத்தகை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குத்தகை விவசாயிகள்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குத்தகை விவசாயிகள்.
Updated on
1 min read

தஞ்சாவூர்: மன்னர்கள் காலம் முதல் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், ஏலம் விடுவதைக் கைவிடக் கோரி தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அலுவலகம் முன் குத்தகை விவசாயிகள் புதன்கிழமை காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ள அருள்மொழிப்பேட்டை கிராமத்தில் 237 ஏக்கர் நிலங்களில் மன்னர்கள் காலம் முதல் ஏறத்தாழ 150 விவசாயிகள் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஆண்டு குத்தகையாக ஒவ்வொரு விவசாயியும் தலா எட்டரை மூட்டைகள் குத்தகையாக செலுத்தி வந்தனர். இதற்கு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் ரசீதும் வழங்கி வந்தது.

இந்த நிலையில் இந்த நிலங்கள் புதன்கிழமை முதல் ஜூன் 26 ஆம் தேதி வரை ஏலம் விடப் போவதாக இந்து சமய அறநிலைத்துறையினர் விவசாயிகளுக்கு ஜூன் 19 ஆம் தேதி நோட்டீஸ் கொடுத்தனர். அப்போது குத்தகை பாக்கி உள்ள விவசாயிகளுக்கு ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தனர். 

இந்த ஏல முறையைக் கைவிடக் கோரி தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அலுவலகத்தில் உதவி ஆணையர் கோ. கவிதா உள்ளிட்ட அலுவலர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. பக்கிரிசாமி தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்கள் பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலர் என். ராம் உள்பட ஏறத்தாழ 100 விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, காலங்காலமாக எங்களது முன்னோர்கள் காடும், மேடுமாக இருந்த நிலங்களைச் சீர்படுத்தி சாகுபடி செய்து, குத்தகை செலுத்தி வந்தோம். 

இந்த நிலையில் இந்த நிலங்களை ஏலம் விடுவதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே ஏலம் விடுவதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படியும், அரசு வழிகாட்டுதலின்படியும்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், அதை மீறி எதுவும் செய்ய முடியாது எனவும் கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கி ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com