செந்தில் பாலாஜி வழக்கில் 2 மணிநேரம் வாதம்: ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு வழக்கை ஜூன் 27ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு வழக்கை ஜூன் 27ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலைவாய்ப்புப் பெற்றுத் தர பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை ஜூன் 14-ஆம் தேதி கைது செய்த நிலையில், நெஞ்சு வலி காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்து வழக்கை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி கோரியும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள காலத்தை காவலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தனி மனுவும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு உகந்ததல்ல என்று அமலாக்கத்துறை தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை மேற்கோள்காட்டி செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்காததால் ஆள்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும், அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரமே இல்லை என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீண்ட நேரம் காரசார விவாதம் நடத்திய நிலையில், பதில் வாதத்துக்காக விசாரணையை தள்ளி வைக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்ததை அடுத்து ஜூன் 27-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com