

நெய்வேலி: கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி ரௌடி எண்ணூர் தனசேகரன் தாக்கியதில் சிறை காவலர் படுகாயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் எண்ணூரை சேர்ந்த பிரபல ரௌடி தனசேகர் கடந்த ஓராண்டு காலமாக கைதியாக உள்ளார். இவர் சிறையில் இருந்தவாறே தமிழகத்தில் செல்போன் மூலம் பல்வேறு குற்ற செயல்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறை அலுவலர் மணிகண்டனுக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரௌடி எண்ணூர் தனசேகர் கூலிப்படையை வைத்து பெட்ரோல் குண்டு வீசி மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் கொலை செய்ய முயற்சிதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எண்ணூர் தனசேகரனின் தம்பி உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அவரது அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளிச்சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தனது அறையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதன் பிறகு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கைதி ரௌடி எண்ணூர் தனசேகர் ஒரு வழக்கு விசாரணைக்காக கடலூர் மத்திய சிறையில் இருந்து விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கு விசாரணை முடிவடைந்த பிறகு கைதி தனசேகர் அங்கிருந்த போலீசாரிடம் செல்போன் கேட்டுள்ளார். ஆனால் போலீசார் தர மறுத்துள்ளனர். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு முறையும் கைதி எண்ணூர் தனசேகரை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து சென்று வந்த பிறகு அவரது அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த சந்தேகத்தின் பேரிலேயே வெள்ளிக்கிழமை காலை கடலூர் மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரியும் பிரித்விராஜ் (28), கைதி ரௌடி எண்ணூர் தனசேகர் அடைக்கப்பட்டுள்ள வெளிச்சிறை எண் 1-க்கு சென்று செல்போன் எதும் இருக்கிறதா என்று சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கு ஒரு செல்போன் இருந்துள்ளதை பார்த்த பிரித்விராஜ் அதனை எடுத்த போது கைதி எண்ணூர் தனசேகர், என்னுடைய அறையிலேயே வந்து சோதனை செய்கிறாயா என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரை கழுத்தில் பலமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த சிறை காவலர் பிரிதிவிராஜை போலீசார் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.