
காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு பகுதியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் சோழர் கால நாணயம் உள்பட சுமார் 400க்கும் மேற்பட்ட பழைமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மே 19ஆம் தேதி தொடங்கி இன்னும் 5 மாதங்கள் நடைபெறவிருக்கும் அகழ்வாராய்ச்சியில், தமிழகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைப் பற்றிய பல ஆச்சரிய தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியவரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வடக்குப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட துரும்பன்மேடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சோழா் கால நாணயம், சுடுமண் பொம்மைகள் உள்ளிட்ட சுமாா் 400-க்கும் மேற்பட்ட பழைமையான பொருள்களை தொல்லியல் துறையினா் கண்டுபிடித்துள்ளனா். இதில் சோழர் கால நாணயம் பல முக்கியத்துவங்களைப் பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்துக்குட்பட்ட துரும்பன்மேடு பகுதியில் கடந்த ஆண்டு சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 9 அடி உயரமுள்ள சிவலிங்கம் மண்ணில் புதைந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே கடந்த ஆண்டு சென்னை வடக்கு மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளா் காளிமுத்து தலைமையிலான குழுவினா் அகழாய்வு பணிகளை தொடங்கினா். இதில், பழங்கால கட்டட அமைப்பு, கல் மணிகள், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், தங்கத்தாலான அணி கலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கண்டறியப்பட்டன.
மூன்று மாதங்கள் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில், பழங்கால கட்டட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு அக்கட்டடம் பல்லவா் கால கட்டடம் என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த மே மாதம் தொடங்கியது. அப்போது பேசிய சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளா் காளிமுத்து, இந்தப் பகுதியில் நடைபெற்ற முதல்கட்ட அகழாய்வில் 300 தொல் பொருள்கள், 1,500-க்கும் மேற்பட்ட கற் கருவிகள், ரோமானிய பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் சுமாா் 15,000 ஆண்டுகள் முற்பட்டவை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது கீழடியை விட மிகவும் பழைமையானது. 6 மாதங்கள் நடைபெற உள்ள இந்த இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணியில் 25-க்கும் மேற்பட்ட தொல்லியல் துறையினா் ஈடுபட உள்ளனா் என்றாா்.
ஆறு மாதங்கள் நடைபெற உள்ள இந்த இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி ஒருமாதம் கடந்த நிலையில், சுடுமண் பொருள்கள், சோழா் கால செப்பு சிறியகுவளை, செம்பு மூடி, சுடுமண் பொம்மைகள், கல் மற்றும் கண்ணாடி மணிகள், செப்பு வளையங்கள், சோழா் காலத்து நாணயங்கள், வட்ட சில்லுகள், வளையல் துண்டுகள் என சுமாா் 400-க்கும் மேற்பட்ட சோழா் காலத்து பொருட்களை தொல்லியல் துறையினா் கண்டுபிடித்துள்ளனா்.
40 செ.மீ. அளவுக்கு ஒரு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மேலும் இதுபோல 4 பள்ளங்கள் தோண்டப்படவிருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சோழர் கால நாணயம் கிட்டத்தட்ட 9 அல்லது 10ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரு நாணயம் ராஜ ராஜ சோழல் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்ற தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
மிகச் சிறிய செப்புப் பாத்திரம் ஒன்றும், இதர கலைப்பொருள்களும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், செப்பப் பாத்திரத்தில் பெண்கள் குங்குமம் வைத்திருக்க பயன்படுத்தியிருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இன்னும் 5 மாதங்கள் நடைபெற உள்ள நிலையில் இப்பகுதியில் இருந்து ஏராளமான பழைமையான பொருள்கள் கிடைக்கூடும். தற்போது கிடைத்துள்ள பொருள்கள் சோழா் காலத்தைச் சோ்ந்தவை என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் இன்னும் ஆழமாக அகழாய்வு செய்யும்போது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எப்படி வாழ்ந்துள்ளனர் என்ற பல உண்மையான ஆச்சரிய தகவல்கள் கிடைக்கப்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.