சென்னை மெட்ரோ: ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ இரயில்களில், ஜூன் 23 அன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..


சென்னை: சென்னை மெட்ரோ இரயில்களில், ஜூன் 23 அன்று (வெள்ளிக்கிழமை)ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்துகொண்டே செல்கிறது. தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வேலைக்காக நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். 

இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பதும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 2015ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. சென்னையின் பரபரப்பான  சாலைகளுக்கு மத்தியில், நகரின் ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில்கள் மிக சுலபமாக இருந்ததால் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.  

இதனால் அதில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதில் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் 2.82 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதைக்குறித்து  மெட்ரோ நிர்வாகம் வெளியீட்டுல செய்தி அறிக்கையில், " சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும். வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

இந்நிலையில், 23.06.2023 அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 23,745 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,935 பயணிகளும், கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,938 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

அந்த வகையில், ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 13.01.2023 அன்று 2,65,847 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 பயணிகளும், மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 10.03.2023 அன்று 2,58,671 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 28.04.2023 அன்று 2.68,680 பயணிகளும், மே மாதத்தில் அதிகபட்சமாக 24.05.2023 அன்று 2,64,974 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். இது மெட்ரோ ரயில்கள் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதையும், இதனால் அதன் பயன்பாடு அதிகரித்து வருவதையே காட்டுகிறது" இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு வசதியும் மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடியும் வழங்கிவருகிறது. 

தற்போது வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை ஒரு வழி தடமும்,சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரையும் இரு வழித்தடங்களில் ரயில் இயக்கப்படுகிறது. மேலும் மூன்று வழித்தடங்களில் இயக்குவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com