பத்திரப்பதிவுத் துறையில் நிகழாண்டு ரூ. 25,000 கோடி வருவாய் இலக்கு: அமைச்சர் மூர்த்தி

பத்திரப்பதிவுத் துறையில் நிகழாண்டு ரூ.25,000 கோடி வருவாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
திருச்சி, தில்லைநகர் அரசு வணிக வளாகத்தில், புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்துவைத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.மூர்த்தி. 
திருச்சி, தில்லைநகர் அரசு வணிக வளாகத்தில், புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்துவைத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.மூர்த்தி. 

திருச்சி: பத்திரப்பதிவுத் துறையில் நிகழாண்டு ரூ.25,000 கோடி வருவாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

திருச்சி, தில்லைநகர், அரசு வணிக வளாகத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இன்று தொடங்கி வைத்தனர்.

திறப்பு விழாவைத் தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது: பத்திரப்பதிவுத் துறையில் கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இதுவரை ரூ. 8,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. பத்திரப்பதிவுத் துறைக்கு அரசு  ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருவாய் இலக்கை அடைய ஏதுவாக, அதிகாரிகள் பணியாற்ற வேண்டியுள்ளது.
பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் இடையூறு இல்லாமல் பணியாற்ற வசதியாக, இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர்கள் யாரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என உத்தரவிட்டப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், துணை பதிவுத்துறை தலைவர் ராமசாமி, உதவி பதிவுத்துறை தலைவர் ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சார்பதிவாளர் அலுவலக  கட்டுப்பாட்டின் கீழ், திருச்சியில்
செங்குளம், வரகனேரி, புத்தூர், பாண்டமங்கலம், உய்யக்கொண்டான் திருமலை மற்றும் திருச்சி மாநகராட்சியை உள்ளடக்கிய 12 வார்டுகள் அடங்கும்.
இதன் மூலம் சுமார் 2 லட்சம் பொதுமக்கள் பயன்படக்கூடிய வகையில், ஆண்டுக்கு  5 ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்யவும், இதன் மூலம் அரசுக்கு ரூ. 52 கோடி வருவாய் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com